தமிழக மக்களுக்கு நிதி வழங்கியுள்ளதாக பிரதமர் மோடி கூறியதற்கு யாருக்குக் கொடுத்தார்? என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். அண்மையில் தமிழ்நாட்டிற்கு வந்த பிரதமர் மோடி, ஒன்றிய அரசு மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக் கூறியிருந்தார். இந்த நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ஒன்றிய அரசின் ஓரவஞ்சனையால் தமிழ்நாட்டுக்குத் வர வேண்டிய நிதி உதவிகள் படிப்படியாகக் குறைக்கப்பட்டு வருவதை நான் அதிகம் விளக்கத் தேவையில்லை.
சில நாட்களுக்கு முன்னால் சென்னைக்கு வந்து பேசிய பிரதமர் மோடி, மாநில அரசுக்குத் தராமல் மக்களுக்கு நேரடியாக நிதி வழங்கி வருவதாக அப்பட்டமான ஒரு பொய்யைச் சொல்லி விட்டுச் சென்றுள்ளார். எந்த மக்களுக்குக் கொடுத்தார் என்பதைச் சொல்லி இருந்தால் அந்த மக்களுக்குக் கிடைத்ததா என்று கேட்கலாம். இரண்டு மாபெரும் இயற்கை பேரிடரை எட்டு மாவட்டத்து மக்கள் சந்தித்தார்கள். இதற்காக 37 ஆயிரம் கோடி ரூபாய் நிதி கேட்டோம். அதற்கு 1 ரூபாயையாவது ஒதுக்கி, தமிழ்நாட்டு மக்களுக்கு உதவி செய்தாரா பிரதமர்? இப்படியா பொய்களைச் சொல்வது?
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரவில்லை என்றாலும் இந்த எட்டு மாவட்டத்துக்கு மக்களுக்காக, மாநிலப் பேரிடர் நிதி மற்றும் அரசுத் துறைகளில் இருந்து 3406.77 கோடி ரூபாய் அளவுக்கு நிதி வழங்கியும், நிவாரணப் பணிகளைச் செய்தும் மக்கள் நலம் காத்து வரும் அரசுதான் இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அரசு” என்று கூறியுள்ளார்.