சனாதனம் பற்றி அமைச்சர் உதயநிதி பேசியதால் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னையில் கடந்த செப்டம்பர் மாதம் தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள் கலைஞர்கள் சங்கம் சனாதன ஒழிப்பு மாநாட்டை நடத்தியது. இந்த மாநாட்டில் விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் உதயநிதி, சனாதன எதிர்ப்பு மாநாடு என்று பெயர் வைக்காமல், சனாதன ஒழிப்பு மாநாடு என்று பெயர் வைத்தது பொருத்தம் என்று கூறினார்.
கொசு, டெங்கு, மலேரியா, கொரோனா போல சனாதனம் ஒழிக்கப்பட வேண்டியது என்று உதயநிதி ஸ்டாலின் பேசினார். இது இந்தியா முழுவதும் பலத்த சர்ச்சையை ஏற்படுத்தியது. சனாதனத்தை எதிர்த்துப் பேசியதை இந்து மதத்தையே எதிர்த்துப் பேசியதாக விஸ்வஇந்து பரிஷத், பாஜக போன்ற அமைப்பைச் சேர்ந்தவர்கள் கூறினர். அமைச்சர் பொறுப்பில் இருந்து கொண்டு இப்படிப் பேசியிருக்கக் கூடாது. அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலினையும், சேகர் பாபுவையும் பதவி நீக்கம் செய்ய வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில் அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோவாராண்ட் வழக்கு இன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் நீதிபதி அனிதா சம்பத் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதி, அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு ஆகியோரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை என்றும் எதனடிப்படையில் அவர் அமைச்சர் பதவியில் நீடிக்கிறார் என்று கேள்வி எழுப்ப முடியாது என்றும் கூறி உதயநிதி ஸ்டாலின், சேகர்பாபு, ஆ.ராசா ஆகியோருக்கு எதிரான கோவாரண்ட் வழக்கை முடித்து வைத்தார்.
பல்வேறு மாநிலங்களில் தொடுக்கப்பட்ட இது போன்ற வழக்குகளில் யாரும் தண்டிக்கப்படவில்லை என்றும் நீதிபதி கூறினார். நீதிபதி மேலும் கூறுகையில், அமைச்சர்கள் தங்கள் பொறுப்புகளை உணர்ந்து செயல்பட வேண்டும். அறநிலையத்துறை அமைச்சராக இருந்து கொண்டு, சேகர்பாபு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கக் கூடாது என்று தெரிவித்தார்.