வியாழன், 7 மார்ச், 2024

நீங்கள் நலமா? திட்டத்தைத் தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்



அரசின் திட்டங்கள் மக்களுக்குச் சென்றடையும் விதமாக நீங்கள் நலமா என்ற திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இன்று தொடங்கி வைத்தார். இந்த் திட்டத்தின் படி, முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் துறை அதிகாரிகள் பொதுமக்களுடன் தொடர்பு கொண்டு அரசின் திட்டங்கள் அவர்களுக்குச் சென்று சேர்ந்திருக்கிறதா என்பதை உறுதி செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பயனாளிகளிடம் தொடர்பு கொண்டு பேசினார்.  அப்போது ஒரு புகார் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் மரியாதையுடன் நடந்து கொண்டார்களா… உரிய நடவடிக்கை எடுத்தார்களா… நடவடிக்கை திருப்தியாக இருந்தத தா என்று மனுதார் ஒருவரிடம் முதலமைச் சர் கேட்டார். அதற்கு அந்த மனுதார நடவடிக்கை திருப்தியாக இருந்த து என்று கூறினார்.

நீங்கள் நலமா திட்டம் குறித்து முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “ ஆட்சிக்கு வந்த ஓராண்டு காலத்தில் ஏராளமான மனுக்கள் என்னைத் தேடித் தேடி வழங்கப்பட்டது. அப்படி வழங்கப்பட்ட கோரிக்கைகளை நமது அரசு நிறைவேற்றிக் கொடுத்த காரணத்தால் – இப்போது நான் செல்லும் பயணங்களில் மக்களின் கைகளில் மனுக்களைக் காண முடியவில்லை; மாறாக, அவர்களது முகங்களில் மகிழ்ச்சியைக் காண்கிறேன்! அந்த மகிழ்ச்சியை மேலும் உறுதிசெய்ய இப்போது துவங்கப்பட்டுள்ளதுதான், “நீங்கள் நலமா?” என்ற திட்டம். இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கென உருவாக்கப்பட்ட வலைத்தளத்தை நான் இன்று தொடங்கி வைத்து ஒரு சில பயனாளிகளிடம உரையாடி அவர்களின் கருத்துகளைக் கேட்டறிந்தபோது உளம் மகிழ்ந்தேன். ஒவ்வொரு குடும்பத்தினரது குரலையும் கேட்டு அவர்களது குறைகளைப் போக்கும் அரசாகக் திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது.

அதேபோல அமைச்சர்கள், உயர் அலுவலர்கள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோரும் உங்களிடம் கலந்துரையாடி நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் நலத்திட்டங்கள் குறித்துக் கருத்துகளைப் பெற்று, அதனடிப்படையில் அரசின் சேவைகளை மேம்படுத்துவதற்கான வழிவகைகள் உருவாக்கப்படும்.  தமிழ்நாடு அரசின் நலத்திட்டங்கள் குறித்து உங்களிடமிருந்து பெறப்படும் கருத்துகள் இந்த வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும். கோட்டையில் உட்கார்ந்து திட்டங்கள் தீட்டி அறிவிப்பதோடு எனது கடமை முடிந்து விட்டதாக நான் எப்போதும் நினைப்பது இல்லை. ஒவ்வொரு திட்டமும் எந்த நோக்கத்துக்காக அறிவிக்கப்பட்டதோ - அந்த நோக்கம் நிறைவேற்றப்பட்டு வருகிறதா என்பதுதான் எனக்கு முக்கியம்!

ஏனென்றால் ஒவ்வொரு திட்டமும் பல்லாயிரம் கோடி ரூபாய் மதிப்பிலானவை. கடுமையான நிதி நெருக்கடிச் சூழலில் நிறைவேற்றப்படுபவை. ஆகவே, ஒதுக்கப்படும் நிதி ஒவ்வொரு குடிமகனையும் சென்று சேர வேண்டும்; நலத்திட்டம் ஒரு ரூபாய் என்றாலும் அது உங்களிடம் வந்து சேர வேண்டும் என்று நினைத்து திட்டங்களைத் தீட்டுபவன் நான்” என்று கூறியிருக்கிறார்.